காபூல்,
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது. இதன் பலனாக கடந்த மாதம் 29-ந் தேதி கத்தார் நாட்டின் தோஹா நகரில் தலீபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்து, அமைதியும், நல்லிணக்கமும் தழைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விரும்பாத தலீபான்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கையில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில், அதிருப்தியில் உள்ள தலீபான்களை பாகிஸ்தான் உளவுப்படையினரும், அல் கொய்தா பயங்கரவாத இயக்கமும் தங்கள் வசப்படுத்தும் ஆள் எடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்று அந்த மாகாண கவர்னர் அப்துல் சத்தார் மிர்ஜ்காவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி குணார் மாகாண கவுன்சில் தலைவர் வேலாயுட் கான் மேஷ்வானி கூறுகையில், இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால், தலீபான் பயங்கரவாதிகள் அல்கொய்தா உள்ளிட்ட பிற பயங்கரவாத இயக்கங்களில் சேரும் ஆபத்து வலுத்துள்ளது என தெரிவித்தார்.