உலக செய்திகள்

மாலியில் நடத்திய அதிரடி தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி: பிரான்ஸ் அறிவிப்பு

மாலி நாட்டில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் வட ஆப்பிரிக்க அல்கொய்தா தலைவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் கொல்லப்பட்டு விட்டார் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

பாரீஸ்,

பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துக்கு வட ஆப்பிரிக்காவில் தலைவராக திகழ்ந்து வந்தவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் (வயது 50) ஆவார். வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்கொய்தாவின் துணை அமைப்புகளும் அவரது பொறுப்பில்தான் செயல்பட்டு வந்தன.

ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் இவர் சிக்கி பலியாகி விட்டார்.

இதை பிரான்ஸ் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளளார்.

இது குறித்து மேலும் தகவல்களை தெரிவித்த அவர், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்தெல் மாலிக் தனது கூட்டாளிகளுடன் கொல்லப்பட்டார் என தெரிவித்தார்.

இந்த அதிரடி நடவடிக்கையானது பயங்கரவாத இயக்கங்களுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது என்றும் பிரான்ஸ் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லி தெரிவித்தார்.

கடந்த மாதம் 19-ந் தேதி மாலியில் நடத்திய மற்றொரு தாக்குதலில் உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகமது மிராபத்தை உயிரோடு பிடித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் படைகள் மாலி நாட்டின் சஹேலில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான வேட்டைகளை தொடர்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அப்தெல் மாலிக் டுரூக்டெல்லை பொறுத்தமட்டில் அவர் அல்ஜீரியா நாட்டில் மெப்டா என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக சண்டையிட்டவர். ஈராக்கில் அல்கொய்தா தலைவராக திகழ்ந்த அபு முசாப் அல் ஜார்கவியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவரது தலைமையில் அல்கொய்தா பயங்கரவாதிகள் கணக்கற்ற தாக்குதல்களை நடத்தி உள்ளனர். குறிப்பாக புர்கினோ பாசோ நாட்டின் தலைநகரான குவாகடோகாவில் ஒரு ஓட்டல்மீது தாக்குதல் நடத்தி 30 பேரை கொன்று குவித்தனர்.

வட ஆப்பிரிக்காவில் அல்கொய்தா இயக்கத்தின் மிகப்பெரிய தலைவராக அப்தெல் மாலிக் திகழ்ந்து வந்த நிலையில் இப்போது பிரான்ஸ் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது, அந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2007-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இவர் மீது பொருளாதார தடை விதித்தது. அதற்கு முக்கிய காரணம், அல்கொய்தா இயக்கத்தினர் நடத்திய பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களுக்கு தேவையான வெடிகுண்டு சாதனங்களை உருவாக்கி தந்தவர் என்பதாகும்.

கடைசியில் மாலி நாட்டில் சஹேலில் 2013-ம் ஆண்டு முதல் முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான பிரான்ஸ் படை வீரர்களின் தாக்குதலில் அவர் பலியாகி விட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்