பெஷாவர்,
உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வருகிற போரில், அந்த நாட்டின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்கா நிதி உதவியும் அளித்து வந்தது.
ஆனால் பாகிஸ்தான், தன் மண்ணில் இருந்து கொண்டு செயல்பட்டு வருகிற ஹக்கானி, அல்கொய்தா, தலீபான் பயங்கரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில், ஹங்கு மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்குமிடத்தில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தளபதியும், அவரது கூட்டாளிகளும் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு உளவு தகவல் கிடைத்தது.
உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அங்கு ஆளில்லா விமானத்தை களம் இறக்கியது. அந்த ஆளில்லா விமானம் ஹக்கானி இயக்க பயங்கரவாதிகள் தங்கி இருந்த வீட்டின் மீது ஏவுகணை வீசி தாக்கியது.
இந்த தாக்குதலில் ஹக்கானி இயக்கத்தின் தளபதி என அறியப்படுகிற எஹ்சான் என்ற கவாரியும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் கொல்லப்பட்டனர். இது ஹக்கானி பயங்கரவாத இயக்கத்துக்கு விழுந்த பலத்த அடியாக அமைந்து உள்ளது.
தனது மண்ணில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்துவது, தனது இறையாண்மையை மீறிய செயல் என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருவதும், அதைக் கண்டுகொள்ளாமல் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்களை தொடருவதும் குறிப்பிடத்தக்கது.