நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது. இதுபற்றி விமானிக்கு தகவல் சென்றது. உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பியது.
இந்த சம்பவம் நடந்தபோது, விமானம் புறப்பட்டு பறந்து சென்று, 33 நிமிடங்கள் வரை ஆகியிருந்தது. இந்நிலையில், பெயர் வெளியிட விருப்பமில்லாத விமான பயணி ஒருவர் கூறும்போது, விமானத்தில் இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை.
இந்த சம்பவம் எதிரொலியாக, பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் என்று கூறினார். டெல்டா விமான நிறுவனத்தின் விமான பிரதிநிதி ஒருவர் கூறும்போது, எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அந்நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.