ஜெனீவா,
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்கிறது.
இந்த குழுவினர் சீனாவின் உகான் நகரில் வைரஸ் தோன்றியதாக கூறப்படும் இடங்களில் ஆய்வு செய்வார்கள் என உலக சுகாதார அமைப்பின் அவசர நடவடிக்கைகள் பிரிவு தலைவர் டாக்டர் மைக்கேல் ரியான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த சிறப்புக்குழுவின் முக்கிய நோக்கமே, உகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்வது ஆகும். எங்கள் அமைப்பில் உள்ள சீன குழுவினருடன் இணைந்து இந்த குழுவினர் பணியாற்றுவார்கள். அதேநேரம் இந்த பணிகளை சீன அதிகாரிகள் மேற்பார்வையிட மாட்டார்கள் என்று கூறினார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வருகையை கொண்டாட வேண்டும் எனக்கூறிய மைக்கேல் ரியான், எனினும் அடுத்த 3 முதல் 6 மாதங்கள் மிகவும் கடினமானவை எனவும் எச்சரிக்கை விடுத்தார்.