இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று அதிகாலை சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் உள்பட 5 பேர் இருந்தனர்.
பயிற்சியை முடித்துவிட்டு அந்த விமானம் விமானப்படை தளத்தை நோக்கி திரும்பி கொண்டிருந்தது. ராவல்பிண்டியின் புறநகர் பகுதியில் உள்ள மோரா கலு என்ற கிராமத்துக்கு அருகே நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. விமானம் விழுந்ததில் 6 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக் குள் சிக்கிக்கொண்டனர். முன்னதாக விமானம் வீடுகளின் மீது விழுந்த சமயத்தில் குண்டு வெடித்ததுபோல், பயங்கர சத்தம் கேட்டது.
இதைக்கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தில் இருந்த எரிபொருள் கசிந்து, விமானத்தில் தீப்பிடித்தது.
அதனை தொடர்ந்து கட்டிடங்களிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும், வீடுகளில் இருந்த அப்பாவி மக்கள் 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் உடல்கள் மீட்கப்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 19 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 16 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வான்போக்குவரத்துக்கான பாதுகாப்பு மோசமான நிலையில் இருப்பதால் அங்கு அடிக்கடி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.