உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

* மியான்மரின் வடக்கு பகுதியில் உள்ள ரத்தின கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 54 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் பலர் மயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

* நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் உள்ள குவாரம் சபுவா என்ற இடத்தில், திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஒன்று, சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 21 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* சீனாவின் இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் உலன்காப் நகரில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு, திடீரென வெடிவிபத்து நேரிட்டது. இதில் 3 பேர் பலியானார்கள்.

* சமூக வலைத்தளங்கள் மூலம் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்ய, பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் 15-ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில், அந்நாட்டு அதிபர் மெக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.