* வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சோசலிச கட்டுமானத்தின் அமைதியான சூழலை பாதுகாக்கவும் ராணுவத்தை மேலும் வலுப்படுத்துவேன் என சூளுரைத்தார்.
* இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்திலுள்ள மெராபி எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு வான் உயரத்துக்கு சாம்பல் புகையை கக்கி வருகிறது. இதனை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
* அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரமிக்க இந்த பதவியை அமெரிக்க ராணுவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயற்றிய நிலையில் ராஜ் ஐயர் முதல் நபராக அந்த பதவியை அலங்கரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
* கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா செல்ல இருந்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழுவுக்கு சீனா அனுமதி அளிக்காத நிலையில், அவர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என சீன அரசை ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
* ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 506 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது.