* ஜெர்மனி நாட்டின் கலோக்னே நகர ரெயில் நிலையம் அருகே உள்ள தெருவில் நேற்று மர்ம மனிதர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய 29 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
* உக்ரைன் நாட்டில் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று அதிபர் பெட்ரோ புரோஷென்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெய்ர் அல்சோர் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான கட்டிடங்களும் இடிந்து தரைமட்டாயின.
* ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் கடந்த 1-ந் தேதி நடத்திய வான் வழித் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர் ஜமால் அல்பதாவி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை அமெரிக்கா இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும் இதுபற்றி ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் பில் அர்பன் தெரிவித்தார்.
* பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அரசுக்கு எதிராக போராடும் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
* பெனின் நாட்டின் அருகே கினியா வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான மாண்டி என்ற சரக்கு கப்பலை கடந்த புதன்கிழமை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். பின்னர் அந்த கப்பலில் இருந்து 6 ரஷிய மாலுமிகளை பிணைக்கைதிகளாக அவர்கள் பிடித்துச் சென்றனர்.
* சிரியா விவகாரத்தில் இஸ்ரேலும், ரஷியாவும் ஒருங்கிணைந்து செயல்பட அதிபர் புதினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யகுவும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.