* இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, அவரது மனைவி சாரா ஆகியோர் மீது ஏற்கனவே 2 ஊழல் வழக்குகள் பதிவான நிலையில், 3-வதாக மேலும் ஒரு வழக்கை பதிவு செய்ய அந்த நாட்டின் போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதில் அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் முடிவு எடுப்பார்.
* வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
* அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரஷியா தலையிட முயற்சி செய்தது என்று அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
* ஜி-20 உச்சி மாநாட்டின்போது ரஷிய அதிபர் புதினுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையை உக்ரைன் விவகாரத்தால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார். இருப்பினும் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விருந்தின்போது, இரு தலைவர்களும் சாதாரண முறையில் பேசிக் கொண்டதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகிறது.
* பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது பிரிவின் தளபதி ஸ்காட் ஸ்டீயர்னி தனது இல்லத்தில் இறந்து கிடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
* மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சீனியர் உடலை வாஷிங்டனுக்கு எடுத்து வருவதற்காக ஹூஸ்டன் நகருக்கு ஜனாதிபதிக்கான ஏர்போர்ஸ் 1 விமானத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
* ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த தங்கள் சொந்த கவச வாகனம் வெடித்து சிதறியதில் 35 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.