* குர்து இன போராளிகளை குறிவைத்து தாக்கும் துருக்கி, ஈராக்கின் சுலைமானியா மாகாணத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
* சவுதி அரேபியாவின் ஜிஜான் விமான நிலையத்தின் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தி உள்ளனர். இதன் பாதிப்பு விவரம் தெரிய வரவில்லை.
* அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கான போட்டியில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் இறங்கி உள்ளார். இவர் இந்திய தாய்க்கும், ஜமைக்கா தந்தைக்கும் மகளாக பிறந்தவர். இப்போது இவர் அமெரிக்க கருப்பர் அல்ல என்ற விமர்சனத்தை டுவிட்டரில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் செய்து அங்கு வைரலாகி உள்ளது.
* எல் சல்வடார் நாட்டைச் சேர்ந்த 43 வயதான அகதி, தன் மகளுடன் அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைந்து கைதானார். அவர் அமெரிக்க காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் தம்பதியர் இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.