போர்ட்டொ பிரின்ஸ்,
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே இன்று போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே அதிபரை படுகொலை செய்தது 28 பேரை கொண்ட வெளிநாட்டு கூலிப்படை என்பதை ஹைதி போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர்களில் 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் ஹைதி அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்ய நடந்த அதிரடி தேடுதல் வேட்டையின் போது கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிபர் படுகொலை செய்யப்பட்டதால், ஹைதி நாட்டில் கடந்த ஒரு வாரமாக அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் மீது வன்முறை கும்பல்கள் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வரும் வழிகளில் இந்த வன்முறையாளர்கள் வழிமறித்து தடுத்து நிறுத்தி விடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன.
ஹைதி நாட்டில் நிலவி வரும் இத்தகைய பதற்றமான சூழல் குறித்து, நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் ஐ.நா.வின் ஹைதி தூதர் ஆண்டோனியோ ரோட்ரிக் பேசினார். அப்போது அவர், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் ஹைதிக்கு உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஐ.நா.வின் அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் பேசுகையில், ஹைதி அதிபர் படுகொலை தொடர்பான விரிவான விசாரணை நடத்துவதற்கும், அமைதியான முறையில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கும் அமெரிக்கா உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.