லண்டன்,
மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசியே காரணம் என இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிதான் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் கிளைவ் டிக்ஸ் கூறுகையில் நீங்கள் ஐரோப்பா முழுவதும் பார்த்தால், தொற்று அதிகரிப்புடன், இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் அப்படி இல்லை. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணம் பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலான மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொடுக்கப்பட்டதே என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் என கூறினார்.
இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிதான், இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.