போர்ட்மோரேஸ்பை,
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் ஹெலா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. திங்கள் கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், சாலைகள் வானுயர்ந்த கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், 20 பேர் வரை உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 300 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலா மாகாணத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மீண்டும் தொலைத்தொடர்புகள் வழங்கும் பணி சீராக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இயல்பு நிலை மீண்டும் திரும்பும் என்று பப்புவா நியூ கினியா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தை தொடர்ந்து பின் அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.