டோடோமா,
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ பிராந்தியத்தின் தலைநகர் மோஷியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வார இறுதி நாட்களில் தேவாலயங்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் கிறிஸ்தவர்கள் தவறாமல் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் தான்சானியா நாட்டின் புகழ்பெற்ற போதகர்களில் ஒருவரும், எழும்பி பிரகாசித்தல் அமைப்பின் தலைவருமான போனிபேஸ் வாம்போசா தலைமையில் மோஷி நகரில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மைதானத்தில் திரண்டனர். அவர்கள், தன்னை ஒரு சீடர் என கூறும் போனிபேஸ் வாம்போசாவுடன் இணைந்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
அப்போது, வாம்போசா ஒரு குடுவையை கையில் எடுத்து, அதில் புனித எண்ணெய் இருப்பதாக கூறினார். பின்னர் அவர் அதனை தரையில் ஊற்றினார். அந்த புனித எண்ணெயை தொட்டால் நோய்கள் குணமாகும் என மக்கள் நம்புகின்றனர்.
இதனால், வாம்போசா தரையில் ஊற்றிய புனித எண்ணெயை தொடுவதற்காக மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னே சென்றனர். இதன் காரணமாக கடும் நெரிசல் ஏற்பட்டது.
மக்கள் முழங்கைகளால் ஒருவருக்கொருவரை இடித்து கீழே தள்ளிவிட்டு விட்டு ஓடினர். இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பலரும் ஏறி மிதித்து சென்றனர்.
இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து மோஷி நகர போலீஸ் கமிஷனர் கிப்பி வரியோபா கூறுகையில், இந்த விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றார்.
மேலும் அவர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கி உள்ளோம். வாம்போசா, தாமாகவே வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறினார்.
வாம்போசா பிரபலமான நபர் என்பதால் அவர் தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லை என கூறிய கிப்பி வரியோபா, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்ட இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை தேவாலய நிர்வாகம் எப்படி கையாண்டது என்பது பற்றியும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜான் மக்குவ்லி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.