அபுதாபி,
ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கிறது.
இதற்கிடையே சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்(ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்த வந்த 3 ட்ரோன்கள் நடுவானிலேயே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஊடுவிய 3 ட்ரோன்கள் வழிமறித்து அழிக்கப்பட்டது. எந்த ஒரு அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.