உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறுகளால் மின்தடை இருளில் மூழ்கிய வங்காளதேசம்

வங்காளதேசத்தில் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட மின்தடையால் அந்த நாடு இருளில் மூழ்கியது.

டாக்கா, 

வங்காளதேசம் நீண்டகாலமாகவே மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது. எனவே அந்த நாடு கணிசமான மின்சாரத்தை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து விலைக்கு வாங்குகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தின் மின்வினியோக கட்டமைப்பில் நேற்று முன்தினம் மதியம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் மின்வினியோகம் தடைப்பட்டு தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. நாட்டின் 80 சதவீத பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் தவிப்புக்குள்ளானர். மின்வெட்டால் சாலைகளில் போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின.

இதன் காரணமாக பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே போல் மின்தடை பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். மின்வெட்டு ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் இணைய சேவை தடைப்பட்டது. இதன்காரணமாக அலுவலகங்களில் வேலை பாதிக்கப்பட்டது.

மாலை நேரத்துக்கு பின்னரும் மின்வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால் எப்போதும் பிரகாசமாக ஒளிரும் டாக்கா நகர வீதிகள் மற்றும் பிற இடங்கள் இருளில் மூழ்கின.

கடைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தும், செல்போன் டார்ச் மூலமும் உரிமையாளர்கள் பொருட்களை விற்பனை செய்தனர். பல மணி நேரமாக மின்இணைப்பு இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான இணை மந்திரி நஸ்ருல் ஹமீட் இதுபற்றி கூறுகையில், "தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்ய என்ஜினீயர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அயராது உழைக்கின்றனர். ஒரு குழுவை அமைத்து, சீர்குலைவுக்கான காரணம் விசாரிக்கப்படும். விரைவில் மின் வினியோகம் முற்றிலும் சீராகும்" என்றார்.

எனினும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், நேற்று காலையில்தான் முழு அளவில் மின் இணைப்பு வந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.