டாக்கா,
ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து பல நாடுகளும் அச்சத்திலேயே உள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்பால் இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இதுவரை 33 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் தற்போது முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வங்காளதேச சுகாதாரத்துறை மந்திரி சாஹித் மாலிக் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியில், 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தற்போது டாக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.