லண்டன்,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை வழியே ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த சூழலில் தனக்கு ஜாமீன் கேட்டு நிரவ் மோடி சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
இருப்பினும் தொடர்ந்து 7வது முறையாக மீண்டும் அவரது சார்பில் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், இதனை ஏற்க மறுத்து நீதிபதி சாமுவேல் கூஸ், நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.