பீஜிங்,
பீஜிங் நகரில் சாஓயாங் மாவட்டத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அப்பகுதியில் பகல் நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அமெரிக்க தூதரகத்தின் அருகே குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. வீசப்பட்ட குண்டு மிகவும் குறைந்தளவு வீரியம் கொண்டதால் எந்த வித அசாம்பவிதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் குண்டு வெடிப்பால் நகரெங்கும் சூழ்ந்த புகை மண்டலத்தை பொதுமக்கள் வீடியோ காட்சியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மேலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அருகேயே இந்திய மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் அமைந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த குண்டு வெடிப்பால் நகரில் எந்த வித பாதிப்பு இல்லை எனவும், யாரும் படுகாயம் அடையவில்லை எனவும் சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதனிடையே தூதரங்கள் இருக்கும் பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் நிலையில், குண்டு வீசிய மர்ம நபர் குறித்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பீஜிங்கில் இருக்கும் அமெரிக்க தூதரகமானது கடந்த 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.