உலக செய்திகள்

சவுதி அரேபியா விவகாரத்தில் திங்கள் கிழமை அறிவிப்பு வெளியிடப்படும் : ஜோ பைடன்

சவுதி அரேபியா தொடர்பாக திங்கள் கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

சவுதி அரேபியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களையும் விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. இதனை சவுதி அரேபிய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி பட்டத்து இளவரசரின் அனுமதியோடே இந்த கொலை நடந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜமால் கஷோகி சூழ்ச்சி செய்து இஸ்தான்புல் வரவழைக்கப்பட்டார். தனது காதலியுடன் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குள் சென்றவர் பின்னர் திரும்பி வரவேயில்லை. தூதரகத்துக்குள்ளேயே அவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது சடலத்தை அமிலத்தை ஊற்றி அழித்துள்ளனர். இத்தகைய கொடூர செயலுக்கு நிச்சயமாக முகமது பின் சல்மான் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். கொலை நடந்த முறையே சவுதி இளவரசரின் பின்னணியை வெளிப்படையாக உணர்த்துகிறது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சவுதி அரேபியா அமெரிக்கா எதிர்மாறையான, போலியான, ஏற்கமுடியாத அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, சவுதி அரேபியா தொடர்பாக திங்கள் கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆனால் இது பற்றி மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

கஷோகி கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தும் சவுதி பட்டத்து இளவரசருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை என்று வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகள் ஜோ பைடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.