வாஷிங்டன்,
உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக ரஷிய தன்னலக்குழுக்களின் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி அளித்திட வேண்டுமென்று அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன் இன்று கேட்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
உக்ரைனின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் நலனுக்காகவும், ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டு ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்கவும், உக்ரைனுக்கு பல கோடிக்கணக்கான பணம் அளித்து உதவிட அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன் கேட்க உள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பில் உதவுவதற்கான புதிய நிதி கோரிக்கையின் ஒரு பகுதியாக, ரஷிய தன்னலக்குழுக்களின் சொத்துக்களை கைப்பற்றி உக்ரைனுக்கு உதவ, ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அனுமதி கோர உள்ளார்.
மேலும், ரஷிய அரசாங்கம் மற்றும் அதன் மூலம் லாபம் ஈட்டுபவர்களுக்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்த வேண்டும். ஒரு நபர் ரஷிய அரசாங்கத்திடம் உறவு வைத்திருப்பதை கிரிமினல் குற்றமாக ஆக்க வேண்டும் என்றும் இன்று கேட்டுக்கொள்ள உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.