உலக செய்திகள்

பாகிஸ்தானின் அடுத்த வெளியுறவு மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்பட வாய்ப்பு?

அவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் மகன் ஆவார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம், இம்ரான் கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது பதவிக்காலம் மோசமாக முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது, இம்ரான்கான் அரசாங்கத்தை அதன் தவறான வெளிநாட்டுக் கொள்கைகளுக்காக தொடர்ந்து குறிவைத்து தாக்கி வந்தது. இதன் காரணமாக, பிரதமர் மற்றும் அதிபர் பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், தற்போது புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார மந்திரி யார் என்ற கேள்வியும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதனையடுத்து, பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில், அடுத்த வெளியுறவுத்துறை மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் கசிந்துள்ளது.

எனினும், என்னை புதிய வெளியுறவு மந்திரியாக நியமிப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

33 வயதான பிலாவல் பூட்டோ, ஆக்ஸ்போர்டில் படித்த அரசியல்வாதி ஆவார். அவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் மகன் ஆவார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான சுல்பிகர் அலி பூட்டோவின் தாய்வழி பேரன் ஆவார்.

பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பிலாவல் பூட்டோ நேற்று, இம்ரான்கான் அரசின் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷியை குறிவைத்து தாக்கி பேசினார். அவர் பேசும்போது,

அரசாங்கத்திற்கு எதிராக வெளிநாட்டு சதி நடந்திருந்தால், இம்ரான்கான் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போதைய போர், பிடிஐ கட்சிக்கும் பிபிபி கட்சிக்கும் இடையே அல்ல. அரசியலமைப்பை ஆதரிப்பவர்களுக்கும் அதை புறக்கணிப்பவர்களுக்கும் இடையே நடைபெறுகிறது.

இம்ரான்கான் நியாயமான, சுதந்திரமான தேர்தலுக்கு பயந்து இருந்தார். எதிர்க்கட்சிகள் ஜனநாயக வழியில் அரசாங்கத்தை அகற்ற விரும்பின.

தேசிய சட்டமன்றம் பாகிஸ்தான் மக்களுக்கு சொந்தமானது. இம்ரான்கான் சட்டமன்றம், நீதித்துறை மற்றும் முழு நாட்டையும் பிரித்திருந்தார்.

விக்கெட்டைப் பறிகொடுத்துவிட்டு ஆடுகளத்தை விட்டு ஓடிவரும் முதல் கேப்டன் அவர்தான் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு