புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, இந்தியாவில் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்களாகி இருந்தால் தனியார் மையங்களில் இந்த பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். முதல் இரு தடுப்பூசிகளாக எந்த தடுப்பூசி போடப்பட்டதோ (கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு) அதே தடுப்பூசிதான் இந்த பூஸ்டர் டோசிலும் செலுத்தப்படும்.
இந்த நிலையில் இவ்விரு தடுப்பூசிகளில் எதை செலுத்தி இருந்தாலும், அதை செலுத்திக்கொண்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு பூஸ்டர் டோசாக செலுத்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதி கோரி தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்து வினியோகிக்கிறது. இந்த தடுப்பூசிதான் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள முதல் ஆர்.பி.டி. புரத தடுப்பூசி ஆகும்.
இந்த தடுப்பூசியை 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அவசர பயன்பாட்டு அனுமதி ஏற்கனவே தரப்பட்டு, 12 முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.