டமாஸ்கஸ்
சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷிய படைகளின் ஆதரவுடன் அதிபர் ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன. கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 18ந் தேதி இரவு முதல் அந்தப் படைகள் தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. 5 நாட்களாக நடந்த தாக்குதலில் 403 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவர்.
இப்படி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை விடுவிப்பதற்குத்தான் தாக்குதல் நடைபெறுவதாக சிரியா அரசு கூறுகிறது.ஆனால் கிழக்கு கவுட்டாவில் நடந்து உள்ள தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல் என்று ஐ.நா. சபை கூறுகிறது. நிவாரணப் பொருட்கள் சென்று அடைவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.
ஆனால் சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது உடன்பாடு ஏற்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தில் தங்கள் நாடு திருத்தம் கோரியுள்ளதாக ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபன்சியா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவர் "ஜனரஞ்சகமான" நடவடிக்கைகளைவிட "சாத்தியமான" நடவடிக்கைகளே தேவை என்று கூறினார்.
குவைத்தும், சுவீடனும் முன் மொழிந்த இத் தீர்மானத்தின்படி 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும். தீர்மானம் நிறைவேறிய 72 மணி நேரம் கழித்து தீர்மானம் அமலுக்கு வரும்.