உலக செய்திகள்

நிறைவு பெறுகிறது ‘பிரெக்ஸிட்’ இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது

இங்கிலாந்து ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே ‘பிரெக்ஸிட்’க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

லண்டன்:

இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்த ஐரோப்பிய கூட்டமைப்பு கடந்த 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பு நாடுகளுக்குள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பணி புரியலாம். இதில் உறுப்பினராக இருந்தாலும், பொருளாதார ரீதியாக வலுவான நாடு என்பதால் இங்கிலாந்து தனித்தே செயல்பட்டது.

கூட்டமைப்பின் பின்தங்கிய நாடுகளில் வசிப்பவர்கள் வேலை தேடி இங்கிலாந்துக்கு அதிகளவில் குடி பெயர்ந்தனர். இதன் காரணமாக ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து இருப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. எனவே, கூட்டமைப்பில் நீடிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக கடந்த 2016ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 58 சதவீதம் பேர் வெளியேற வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நிகழ்வு தொடங்கியது.

11 மாதம் கால அவகாசம்

ஆனால், பிரெக்ஸிட் ஒப்பந்தம் எளிதாக நிறைவேறவில்லை. இந்த விவகாரத்தில் இங்கிலாந்தின் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி தவித்தார். பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து, புதிதாக தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெற்றார். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்ததால் அவரால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 31ந்தேதி ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது.

எனினும் பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதற்கு 11 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

நிறைவு பெறுகிறது பிரெக்ஸிட்

ஆனால் பிரெக்ஸிட்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்புக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிய இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரசும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் வருகிற 31ந்தேதியுடன் இங்கிலாந்து வர்த்தக ரீதியாகவும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது.

அதாவது ஏறத்தாழ 4 ஆண்டுகளாக இங்கிலாந்து அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த பிரெக்ஸிட் முழுமையாக நிறைவு பெறுகிறது.

நாட்டுக்கு மிகவும் அவசியமானது

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

மிகப்பெரிய ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். இங்கிலாந்து மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ, அதனை நிறைவேற்றியுள்ளோம். ஐரோப்பிய கூட்டமைப்பின் சந்தையில் இங்கிலாந்து பொருள்கள் எவ்வித வரிகளும், கட்டுப்பாடுகளும் இன்றி விற்பனையாகும்.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் மூலம் நமது சட்டங்கள் மற்றும் நமது விதியின் கட்டுப்பாட்டை நாம் திரும்ப பெற்றுள்ளோம். பல ஆண்டுகளாக நமது அரசியலை தூண்டிவிட்ட ஒரு கேள்விக்கு நாம் இன்று பதிலை தந்துள்ளோம். இதன் மகத்தான தன்மையை உணர ஒரு புதிய மற்றும் உண்மையான சுதந்திர தேசமாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். இந்த ஒப்பந்தம் அவ்வளவு இனிமையானது அல்ல. ஆனால் இந்த தருணத்தில் அது நாட்டுக்கு மிகவும் அவசியமானது.

இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்