உலக செய்திகள்

47 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது

நீண்ட இழுபறிக்கு பின் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

தினத்தந்தி

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பு, 28 நாடுகளை கொண்டிருந்தது. இந்த அமைப்பில் இங்கிலாந்து 1973-ல் சேர்ந்தது. 43 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற 2016-ம் ஆண்டு தீர்மானித்தது. இதையொட்டி அந்த ஆண்டு ஜூன் மாதம் மக்கள் கருத்தறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெருவாரியான மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற ஆதரவாக வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கை தொடங்கியது.

டேவிட் கேமரூன், தெரசா மே என 2 பிரதமர்களின் பதவி, இதில் பறிபோனது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் இது தொடர்பான ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் ஏற்றது. அதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு லண்டன் நேரப்படி 11 மணிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி வெளியேறியது. 47 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அவர்கள் தேசப்பற்று பாடல்களை பாடி கொண்டாடினர். இதற்கு மத்தியில் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களும் ஒயிட்ஹாலில் பேரணி நடத்தினர். இதே போன்று ஸ்காட்லாந்திலும் பிரெக்ஸிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு சற்றுமுன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமூக வலைத்தளத்தில் விடுத்த அறிக்கையில், பலருக்கு இது நம்பிக்கையின் வியக்கத்தக்க தருணம். ஒருபோதும் இது நடக்காது என அவர்கள் நினைத்த தருணம். கவலை மற்றும் இழப்பு உணர்வை கொண்டுள்ளவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய அரசியல் சண்டை ஒருபோதும் முடிவுக்கு வராது என்றும் ஒரு தரப்பினர் கவலைப்பட தொடங்கி உள்ளனர். அந்த உணர்வுகளையெல்லாம் நான் புரிந்து கொண்டுள்ளேன். இப்போது நாட்டை ஒன்றுபடுத்தி, முன்னோக்கி அழைத்துச்செல்வதுதான் முக்கியப் பணியாக அமைந்துள்ளது என கூறி உள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள் ; -

* இங்கிலாந்து சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள்.

* ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாடுகளில் இங்கிலாந்து பிரதமர் மற்றும் மந்திரிகள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

* பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இங்கிலாந்து பேச ஆரம்பிக்க முடியும்.

* இங்கிலாந்து பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகள் மாறும்.

* பிரெக்ஸிட் நினைவாக ஜனவரி 31 தேதியை தாங்கிய 50 பென்ஸ் நாணயங்கள் ( பவுண்ட்) (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46) இன்று புழக்கத்துக்கு வரும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது