லண்டன்,
மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசெர்பைஜான் நகரில் உள்ள பாகு நகருக்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில், என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து மீண்டும் விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.
விமான பயணி ஒருவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், விமானத்தின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக முதல் வகுப்பு கேபினில் இருந்து புகை வெளிப்பட்டது. இந்த கோளாறு காரணமாக நாங்கள் பாகுவில் தவித்து வருகிறோம் என தெரிவித்து இருந்தார். முன்னதாக, இங்கிலாந்தில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மும்பையில் இருந்து தாமதமாகவே புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் லண்டனில் விமான சேவைகள்,ரெயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. சாலைகள், ரெயில் தண்டவாளங்களிலும் பனி மூடியதால் வாகனங்கள், ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.