லாஸ் ஏஞ்சல்ஸ்,
உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக்கொண்டிருப்பவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 40 வயதான இவர் பாடகி, பாடலாசிரியர், நடன கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார்.
பாப் இளவரசி என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார். இவர் தனது சுய சரிதை புத்தகத்தை எழுதுவதாக உறுதி செய்துள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டார்.
தனது வாழ்க்கையில் நடந்த பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வேதனை நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொள்ளப்போவதாக கூறி உள்ளார். இவர் விவாகரத்தனா நிலையில் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததும், கடந்த ஆண்டு இறுதியில் அதில் இருந்து கோர்ட்டால் விடுவிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
சுய சரிமை எப்போது வெளியாகும், எந்தப் பதிப்பாளர் வெளியிடப்போகிறார் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், இவரது சுய சரிதையை வெளியிட சைமன் அண்ட் ஷஸ்டர் பதிப்பகம், இவருடன் 15 மில்லியன் டாலர் (சுமார் ரூ.112 கோடி) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது சுயசரிதையை எழுதுவதில் அறிவுசார் அணுகுமுறையை பின்பற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.