சோபியா,
பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியா அருகே பஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இத்தகவலை நாட்டின் சுகாதார அமைச்சர் கிரில் அன்னீவ் உறுதிபடுத்தினார். இதனிடையே விபத்து குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
வடக்கு சோபியாவிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு அமைந்துள்ள ஸ்வோகே நகரின் இஸ்கார் பள்ளத்தாக்கு அருகே பஸ் சென்று கொண்டிருக்கையில் வளைவில் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 15 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று, பஸ்சில் பயணம் செய்த அனைவரும் ஓய்வூதியகுழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுற்றுலா சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் யாரும் பஸ்சில் பயணம் செய்யவில்லை என கூறியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கான் நாடுகளில் விபத்தில் சிக்கி சுமார் 682 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.