உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தீவிரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தீவிரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாத அமைப்பு 16 வருடங்களாக போரில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசின் நிலை தன்மையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டது. இதனால் தலீபான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்துள்ளது.

எனினும் அந்நாட்டில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், காபூல் நகரில் இன்று காலை 9.10 மணியளவில் வெடிகுண்டு வைக்கப்பட்ட கார் ஒன்று தற்கொலை தீவிரவாதியால் வெடிக்க செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பொதுமக்களில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

பொதுமக்கள் அதிக அளவில் பணிக்கு செல்லும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. நாட்டை பாதுகாப்பது என்பது எங்களுடைய முக்கிய முயற்சி என்று அந்நாட்டில் அமெரிக்க உயரதிகாரி தெரிவித்த சில நாட்களில் தாக்குதல் நடந்துள்ளது.