சாண்டியாகோ,
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் கடந்த சில மாதங்களாக சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
இதனை கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதல் பல இடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
சில பகுதிகளில் ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேரா தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ, பியூண்டே அல்ரோ மற்றும் சான் பெர்னார்டோ உள்ளிட்ட பகுதிகளில் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் இன்று அறிவித்துள்ளார்.
அடுத்த 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.