உகான்,
சீனாவின் உகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இன்று உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை ஒவ்வொன்றும் தங்கள் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பறிகொடுத்துள்ளன. (அமெரிக்காவில் இந்த உயிரிழப்பு 34 ஆயிரத்தை கடந்துவிட்டது) இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பல ஆயிரம் மடங்கு அதிகம்.
அதேநேரம், கொரோனாவால் பெரிதும் பாதிப்படைந்த உகான் நகரில் கடைசி நிலவரப்படி பலி எண்ணிக்கை 2,579 ஆக இருந்தது. சீனாவின் ஒட்டு மொத்த உயிரிழப்பும் கூட சில வாரங்களாகவே சுமார் 3,300-ல் நிலை கொண்டிருந்தது.
சீனாவில், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்க, இறப்பு விகிதம் மட்டும் எப்படி மிக மிக குறைவாக இருக்கிறது? என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகம் கிளப்பின.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒருபடி மேலே போய், தனது நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கையை சீனா மூடி மறைக்கிறது. எனவே உண்மையை சொல்ல வேண்டும் என்று குற்றம்சாட்டினார்.
இந்த விஷயத்தில், சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனமும் உடந்தையாக உள்ளது என்றும் அவர் பாய்ந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டது.
இதற்கு சீன அதிபர் ஜின்பிங் எந்த பதிலும் சொல்லவில்லை. அந்நாட்டின் சார்பாக விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது சீனாவின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்தது.
இந்த நிலையில், உகான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உகான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த 2,579 என்ற உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக மாற்றம் செய்யப்பட்டது. இது 50 சதவீத உயர்வு ஆகும்.
இதற்கான காரணம் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மருத்துவமனைகளில் சேர முடியாத நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தாமதமாக, தவறாக அல்லது இரட்டை அறிக்கை பதிவிடுதல், தனியார் மருத்துவமனைகள், தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இதர மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல்களை பெற்று இணைப்பதில் ஏற்பட்ட சிரமம் ஆகியவை இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
எங்களுக்கு வாழ்க்கையும், மக்களும் மிகவும் முக்கியமானவர்கள். தொற்று நோய்களின்போது ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பும் அவர்களது குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் நகரத்துக்கும் துக்கத்தை அளிக்கிறது.
தொற்று நோய்களின்போது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், தியாகம் செய்த எங்கள் தோழர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் எங்கள் நேர்மையான அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
உகான் நகர பலி எண்ணிக்கை மாறுபாட்டால் அது சீனாவின் ஒட்டு மொத்த உயிரிழப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இதுபற்றி எந்த தகவலும் இந்த அறிக்கையில் காணப்படவில்லை.
அதேநேரம், உகான் நகரத்தில் கொரோனா பலி உயர்ந்ததுபோல் சீனா முழுவதற்கும் எண்ணிக்கை மாறுபடுமா? என்ற எதிர்பார்ப்பும் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.