பீஜிங்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தகவல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை சர்வதேச சட்ட மீறல் ஆகும் என சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், ஈரான் மீது நடந்த தாக்குதல் மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனி படுகொலை ஆகியவை ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பெரிய அளவில் மீறும் செயலாகும்.
ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளையும் மற்றும் சர்வதேச உறவுகளில் உள்ள அடிப்படை விதிகளையும் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். இதனை உறுதியாகவும், வன்மையாகவும் சீனா கண்டிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி, ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவிடம் இன்று பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறினார்.