சீன ஹேக்கர்கள்
லடாக் பிரச்சினையில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எல்லையில் ஊடுருவ முடியாத சீனா, இந்திய அரசு மற்றும் முக்கிய நிறுவனங்களின் கணினிகளை முடக்கி தகவல்களை திருட முயற்சித்து வருகிறது.இது அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதும் இந்த ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து கூறியுள்ளது.அந்தவகையில் அமெரிக்காவின் மசாசூசெட்சை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்சிக்ட் குழுமம், இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. சீன அரசுடன் தொடர்புடைய டேக்-28 என்ற தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ள ஹேக்கர்கள் குழு விண்டி எனப்படும் மால்வேர் மூலம் இந்திய நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவி உள்ளது.
எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த ஹேக்கிங் பிரச்சினை அதிகரித்து உள்ளதாக இன்சிக்ட் குழுமம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 261 சதவீதம் அதிகரித்து இருந்ததாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
மத்திய பிரதேச போலீஸ்
இதில் முக்கியமாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தை உள்ளடக்கிய மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் கணினியில் இருந்து 500 மெகா பைட் (எம்.பி.) அளவுக்கு தகவல்களை டேக்-28 நிறுவனம் ஊடுருவி பெற்று இருக்கிறது. இந்தியா-சீனா மோதல் தொடர்பாக இந்த ஊடகம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்திருந்ததாகவும் இன்சிக்ட் குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.இதைப்போல லடாக் மோதலை தொடர்ந்து சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த மாநில போலீஸ் துறையின் கணினியில் இருந்தும் 5 எம்.பி. அளவுக்கு தகவல்கள் பெறப்பட்டு இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய குடிமக்களின் அடையாளங்களை சேமித்து வரும் ஆதார் ஆணையத்திலும் சீன ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர். இந்த ஆணையத்தில் இருந்தும் 10 எம்.பி. அளவிலான தகவல்களை பதிவிறக்கம் செய்தும் 30 எம்.பி. அளவுக்கு பதிவேற்றம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு மிகுந்தது
இவ்வாறு சீன ஹேக்கர்கள் இந்திய அரசு மற்றும் நிறுவனங்களிடம் தொடர்ந்து கைவரிசை காட்ட முயற்சித்து வருவதாக இன்சிக்ட் குழுமம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கிடையே இந்திய குடிமக்களின் ஆதார் தகவல்களை திருடுவதற்கு சீன ஹேக்கர்கள் முயன்ற சம்பவம் தங்களுக்கு தெரியாது என ஆதார் ஆணையம் தெரிவித்து உள்ளது. எனினும் ஒருங்கிணைந்த மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டிருப்பதால் ஆதார் தொடர்பான தகவல்களை யாராலும் திருட முடியாது எனவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.