பெய்ஜிங்,
கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையைக் கண்டறிய சீனாவிடம் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா வாங்கியது. மாநிலங்களுக்கு இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. சில மாநிலங்கள் நேரடியாகவும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வாங்கியன.
இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரம் குறைந்தவையாக இருப்பதாக சில மாநில அரசுகள் கூறின. இதையடுத்து, ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது. தொடர்ந்து, ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்புமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தது.
இந்த நிலையில், இந்தியாவின் முடிவுக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனா இது தொடர்பாக கூறுகையில், இந்தியாவின் முடிவு வருத்தம் அளிக்கிறது. இதற்கு ஏதுவான முடிவு இந்திய அரசால் எடுக்கப்படும் என்று நம்புகிறோம். சீனா, தான் ஏற்றுமதி செய்யும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மொத்த சீனப் பொருட்களும் தரமற்றவை என்று சிலர் முத்திரைக் குத்தி வருகிறார்கள். அது பொறுப்பற்ற விளக்கமாக உள்ளது. கொரோனா வைரசு க்கு எதிரான போரில் இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும், எனத்தெரிவித்துள்ளது.