பெய்ஜிங்,
48 உறுப்பு நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட புதிதாக விண்ணப்பிப்பவர்கள் உறுப்பினராக முடியாது.
கடந்த வருடம் ஜூன் மாதம் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக சியோலில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) சேர்க்கக்கூடாது என சீனா தடுத்துவிட்டது.
சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தும் இந்தியாவுக்கு பலனில்லாமல் போய்விட்டது. இந்தியாவின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்பட பிற அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளும் ஆதரவை தெரிவித்து வருகிறது.
அணு சக்தி விநியோக கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளின் கூட்டம் ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சீனா தொடர்ந்து, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என கூறிவருகிறது.
இப்போது இவ்விவகாரம் தொடர்பாக ரஷியாவுடன் தொடர்பில் உள்ளோம் என சீனா கூறிஉள்ளது. இருப்பினும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பழைய பாட்டேயே பாடிஉள்ளது சீனா.
சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவ சாங்யிங் பேசுகையில், சீனா மற்றும் ரஷியா உள்பட பிற உறுப்பு நாடுகளும் நெருங்கிய தொடர்பில் உள்ளது, ஆனால் நாங்கள் என்எஸ்ஜியின் கொள்கை விதிகளின்படியே நடந்துக் கொள்வோம் என கூறிஉள்ளார். சுஷ்மா சுவராஜ் நேற்று இது தொடர்பாக பேசுகையில் ரஷியாவுடன் இந்தியா தொடர்பில் உள்ளதாகவும், சீனாவை சமாதானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியநிலையில் சீனாவிடம் இருந்து இந்த கருத்து வெளியாகி உள்ளது. முன்னதாக சீனா கூறுகையில் என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினர் ஆவதில் நிலையானது சிக்கலாகி உள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.