பெய்ஜிங்,
இந்தியாவுடன், அவ்வப்போது உரசிக்கொள்ளும் சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. பாகிஸ்தான் வழியாக பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் ஆயுத உதவிகளையும் சீனா செய்து, அந்நாட்டில் தனது பிடியை பலப்படுத்து வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு போட்டியாக ஆயுதங்களை உலக நாடுகளிடம் வாங்கி குவிக்கிறது. குறிப்பாக சீனாவுடன் அதீத நெருக்கத்துடன் செயல்பட்டு ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது.
சமீபத்தில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 என்ற நவீன ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 48 அதி நவீன ஆளில்லா ராணுவ விமானங்களை விற்பனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது. கண்காணிப்பு, தாக்குதல் உள்ளிட்ட பன்முனை பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் வசதி கொண்டது என்று கூறப்படுகிறது.
விங் லூங்-II என்ற பெயருடன் அழைக்கப்படும் கண்காணிப்பு விமானமானது, செங்குடு விமான தொழிற்சாலையில் இருநாட்டு கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட உள்ளதாகவும் சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இருப்பினும், எவ்வளவு தொகைக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது, எப்போது கண்காணிப்பு விமானம் வழங்கப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஈராக், சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஏற்கனவே இவ்வகை உளவு விமானங்களை சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது.
ஏற்கனவே, ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய ஜேஎப் -தண்டர் என்ற ஒரு என்ஜின் கொண்ட விமானத்தை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.