பீஜிங்,
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் விமானத்தில் பயணம் செய்தபோது, விமானியின் அறைக்குள் சென்று அமர்ந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதன்கீழ் அவர் விமானிக்கு நன்றி, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். விமான விதிமுறைகளின்படி பயணிகள் யாரும் விமானி அறைக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்பதால் அவரது இந்த புகைப்படம் குறுகிய நேரத்தில் மிகவும் வைரலானது. அதே சமயம் விதிமுறைகளை மீறி பயணியை விமானி அறைக்குள் அனுமதித்ததாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விசாரித்ததில் அந்த புகைப்படம் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி குய்லின் நகரில் இருந்து யாங்சூ நகருக்கு சென்ற ஏர் குய்லின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பெண் பயணியை விமானி அறைக்குள் அனுமதித்த அந்த விமானிக்கு விமானம் ஓட்ட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. எனினும் அந்த விமானியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அதுமட்டும் இன்றி இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற விமான ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் குய்லின் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.