* வடகொரியாவையும், அதன் தலைமையையும் விமர்சித்து எதிர்ப்புச்செய்திகளுடன் தென் கொரியாவில் இருந்து பலூன்களை பறக்க விட்டனர். இதை மனித மோசடி என வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜங் சாடினார். அதைத் தொடர்ந்து இப்படி பலூன்கள் பறக்க விடுவதை நிறுத்த தென்கொரியா முடிவு எடுத்துள்ளது.
* அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவுகிறது. அவை மோதலின் பாதையில் செல்வதா, உலகளாவிய பிரச்சினைகளை சமாளிக்க ஒத்துழைக்கும் வழியை கண்டுபிடிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் கூறினார். இரு தரப்பும் ஒரு சிலவற்றில் உள்ள தங்கள் போட்டியை தவிர்த்து, இணைந்து பணியாற்றுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
* மலேசியாவில் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி பெர்சாட்டு கட்சி தலைவர் பதவியை விட்டு முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது விலகினார். இந்த நிலையில் பிரதமர் முகைதீன் யாசினை கட்சியின் முறையான செயல்தலைவராக அந்த கட்சியின் சுப்ரீம் கவுன்சில் அங்கீகரித்து உள்ளது.
* ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இந்த உரையாடலின்போது, ஜெர்மனியுடனும், ஐரோப்பிய கூட்டமைப்புடனும் திட்டமிட்ட அரசியல் செயல் திட்டத்தை முடுக்கி விடுவதற்கான உறுதியை ஜின்பிங் அளித்தார்.
* அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி வழங்கக்கோரியும் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வார இறுதியில் போராட்டம் நடத்த அந்த இனத்தை சேர்ந்தவர்கள் முடிவு எடுத்துள்ளனர். இப்படி ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து போராட்டம் நடத்துகிறபோது அது கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் நியுசவுத்வேல்ஸ் மாகாண போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது.