பெய்ஜிங்,
சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான 'கிக்சி திருநாளை' முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சீன கலாசாரத்தில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்னணி கொண்ட காதலர் கதையை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. விண்வெளியில் உள்ள நெசவாளர் பெண் மற்றும் மாடு மேய்க்கும் இளைஞன் ஆகிய இரு காதலர்கள், ஆண்டுக்கு ஒருமுறை 'மக்பை' பறவைகள் உருவாக்கும் பாலத்தின் வழியாகச் சந்திப்பதே இந்த கிக்சி திருநாளின் பின்னணிக் கதையாகும்.
இந்த நெகிழ்ச்சியான புராணக் கதையை, நவீன கணினித் தொழில்நுட்பத்தின் உதவியோடு 2,000 ட்ரோன்களை ஒருங்கிணைத்து விக்டோரியா துறைமுகத்தின் வான்பரப்பில் தத்ரூபமாகப் பிரதிபலித்துக் காட்டினர்.
ஒரே நேரத்தில் வான்வெளியில் பாய்ந்த 2,000 ட்ரோன்களும், கணினி கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் ஒத்திசைக்கப்பட்டு பல்வேறு முப்பரிமாண வடிவங்களை உருவாக்கின. பிரிந்திருக்கும் காதலர்கள் ஒன்று சேர்வதைக் குறிக்கும் பிரம்மாண்ட பறவை பாலம் 'மக்பை' வான்வெளியில் ஒளிரச் செய்யப்பட்டது.
பாரம்பரிய சீன உடையில் காதலர்கள் கைகோர்த்து நிற்கும் காட்சிகள் அனிமேஷன் வடிவில் காட்டப்பட்டன. வண்ணமயமான விளக்குகள் மூலம் வானில் பிரம்மாண்ட ரோஜா மலர்களும், இதய வடிவங்களும் உருவாக்கப்பட்டு ஒட்டுமொத்த வான்பரப்பையும் காதல் மயமாக்கின.
இந்த சாகச நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், சீனாவின் தொழில்நுட்ப வலிமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது. அதிவேகக் காற்று மற்றும் வான்வெளி சவால்களையும் தாண்டி, 2,000 ட்ரோன்களும் ஒன்றோடொன்று மோதாமல், மிகத் துல்லியமான செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் மையப்படுத்தப்பட்ட கணினி கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. துறைமுகக் கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டு வியந்தனர்.