உலக செய்திகள்

“வாருங்கள், சந்தித்து பேசுவோம்” - தென்கொரியா செல்லும் டிரம்ப், வடகொரிய தலைவருக்கு அழைப்பு

தென்கொரியாவுக்கு செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “வாருங்கள் சந்தித்து பேசுவோம்” என வடகொரிய தலைவருக்கு திடீர் அழைப்பு விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தினத்தந்தி

ஒசாகா,

சர்வதேச அரங்கில் வட, தென் துருவங்களாக விளங்கியவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்பிலும் ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அதில், கொரிய பிரதேசத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற உழைப்போம் என உறுதி எடுத்து இருந்தனர்.

அதன்பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதியும், 28-ந்தேதியும் வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயில் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். ஆனால் இரு தரப்பு உடன்பாடு ஏதும் செய்து கொள்ளாமல், இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்தது. வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங் அன் வலியுறுத்தியதால்தான் ஹனோய் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் வடகொரியாவோ, பொருளாதார தடைகளை முழுமையாக விலக்குமாறு கூறவில்லை, வாழ்வாதாரத்துக்காக பகுதியளவு தடைகளைத்தான் விலக்குமாறு அமெரிக்காவை கூறினோம் என கூறியது.

ஹனோய் பேச்சு வார்த்தை முறிந்தாலும், இரு தரப்புக்கு இடையே மோதல்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற டிரம்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அந்தப் பதிவில் அவர், சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு உள்ளிட்ட மிக முக்கியமான சந்திப்புகளை நடத்தி விட்டு, ஜப்பானில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறேன் (அதிபர் மூன் ஜே இன்னுடன்). அங்கு நான் இருக்கும்போது, வட கொரியாவின் தலைவர் கிம் இதைப் பார்த்தால், நான் அவரை எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் சந்திப்பேன். அவருடன் கை குலுக்குவேன். ஹலோ சொல்லுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு நடந்தால், ஓராண்டு காலத்தில் டிரம்பும், கிம்மும் சந்திப்பது மூன்றாவது முறையாக அமையும்.

ஆனால் இதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால், திடீர் அழைப்பு என்பதால் இரு தரப்பு சந்திப்புக்கு தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை.

இதையெல்லாம் கடந்து டிரம்பும், கிம்மும் சந்தித்தால் அது இருவரும் உறவைப் புதுப்பிக்கவும், எதிர்காலத்தில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தவும் உதவியாக இருக்கும் என சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.

கிம்முக்கு டிரம்ப் விடுத்துள்ள அழைப்பை நல்ல யோசனை என வட கொரியா வரவேற்றுள்ளது.

இதையொட்டி, வடகொரியாவின் வெளியுறவு துணை மந்திரி சோ சன் ஹூய் கூறும்போது, இது தொடர்பாக அதிகாரப்பூர்வ திட்டம் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றால், இரு தலைவர்கள் இடையேயான தனிப்பட்ட உறவுகள் மேலும் வலுப்படவும், இரு நாடுகள் இடையேயான உறவுகள் மேம்படவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்