கீவ்,
உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் நகர சுற்றுப்புறங்களில் ரஷியா தனது தாக்குதலை தீவிரமாக்கி உள்ளது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
ஏப்ரல் 29, 8.00 P.M
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா குறைத்துள்ளதால், குறைவான உயிரிழப்புகளை ரஷியா சந்தித்து வருவதாக மேற்கத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, புவியியல் பரவலில் அடிப்படையில் ரஷியா தனது நடவடிக்கைகளை குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ரஷியா சந்திக்கும் உயிரிழப்புக்கள், ரஷிய படைகளின் போரிடும் விருப்பத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய அவர், உக்ரைன் சந்திக்கும் உயிரிழப்புக்கள் உக்ரேனிய படைகளின் மன உறுதியை பாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 29, 6.00 P.M
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலென்ஸ்கா, போலந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணல், செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அதில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த நாள் முதல் தற்போது வரை தனது கணவரை நேரில் பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவுடனான போர் தனது கணவரை மாற்றவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தனது கணவரிடம் இருக்கும் வெற்றி பெறுவதற்கான உறுதியையும், அவர் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு மனிதர் என்பதையும் இந்த போர் உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒலெனா ஜெலென்ஸ்கா மற்றும் அவரது 2 குழந்தைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஏப்ரல் 29, 5.00 P.M
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் தனது பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க நிதியுதவி வழங்கும் ஒளிபரப்பு ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா தெரிவித்துள்ளது. வீரா ஹைரிச் வசித்து வந்த கட்டிடம் தாக்கப்பட்டதில் அவர் இறந்தார் என்றும், அவரது உடல் கட்டிட இடிபாடுகளில் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 29, 3.00 P.M
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் வருகையின் போது கீவ் நகரத்தின் மீது ரஷியா நடத்திய இந்த தாக்குதலின் முலம், ஐக்கிய நாடுகள் சபையை அவமானப்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தற்போது கிழக்கு பகுதிகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கீவ் நகரின் மீது நடைபெற்ற இந்த தாக்குதலால் அங்கு ஏற்பட்டு வந்த தற்காலிக இயல்பு நிலை சிதைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 29, 2.00 P.M
"போரை முடிவுக்கு கொண்டுவருவதில் தோல்வி" -ஐ.நா.
உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பதுங்கி இருக்கும் எஃகு ஆலையை விட்டு வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 29, 10.00 A.M
கீவ் நகர் மீது ரஷியா கொடூர தாக்குதல் உக்ரைன் கடும் கண்டனம்
ஐ.நா. தலைவர் கீவ் நகருக்கு வந்தபோது தலைநகர் மீது ரஷியா ஏவுகணைகளை வீசியதில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 29, 9.00 A.M
உக்ரைனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா பணம் கொடுக்க வேண்டும் - ஸ்லோவாக்கியா துணை பிரதமர்
ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமர், ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைனில் முழு நகரங்களையும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையையும் அழித்துள்ளனர், மேலும் போர் முடிந்ததும் மாஸ்கோ நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அதன் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
ஏப்ரல் 29, 06.00 a.m
பல நாடுகள் தங்கள் குடிமக்களை மால்டோவா மற்றும் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகின்றன.
பல்கேரியாவும் இஸ்ரேலும் நேற்று மால்டோவா மற்றும் ரஷிய ஆக்கிரமிப்பு டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குச் செல்வதற்கான பரிந்துரைகளை மாற்றிக்கொண்டன.
முன்னதாக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் "மோசமான பாதுகாப்பு நிலைமை" காரணமாக மால்டோவாவை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
ஏப்ரல் 29, 05.33 a.m
உக்ரைனுக்கு ஆயுதக் கடன் வழங்குவதற்கான மசோதாவுக்கு காங்கிரஸ் ஒப்புதலை அளித்ததைத்தொடர்ந்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
ஏப்ரல் 29, 04.16 a.m
பொதுமக்கள் அசோவ்ஸ்டல் ஆலையை விட்டு வெளியேறலாம், பாதுகாவலர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். மேலும் இது பேச்சுவார்த்தைக்கானது அல்ல என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 29, 03.51 a.m
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், நேற்று கீவ்வில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தென்கிழக்கு உக்ரேனிய நகரமான மரியுபோலில் போராளிகளும் பொதுமக்களும் பதுங்கியிருக்கும் எஃகு ஆலையை விட்டு அவர்களை வெளியேற்றுவதற்கான தீவிர விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.
ஏப்ரல் 29, 03.40 a.m
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா இரண்டு ஏவுகணைகளை வீசியது, அவற்றில் ஒன்று குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தைத் தாக்கியது, குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 29, 02.17 a.m
சோவியத் கால ஆயுதங்களில் இருந்து நவீன மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மாறுவதற்கான உதவி உட்பட, ரஷியாவிற்கு எதிரான போரில் பல ஆண்டுகளாக உக்ரைனுக்கான ஆதரவைத் தக்கவைக்க நேட்டோ தயாராக உள்ளது என்று ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 29, 01.36 a.m
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காங்கிரசிடம் உக்ரைனை ஆதரிப்பதற்காக $33 பில்லியனைக் கேட்டுள்ளார். அத்துடன் ரஷியாவின் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷியாவின் சொத்துக்களைப் பறிப்பதற்கான புதிய சட்ட விதிமுறைகளையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 29, 12.16 a.m
கிழக்கு உக்ரைனில் ரஷியா ஏவுகணைவீசி, வெடிபொருள் கிடங்குகளை அழித்தது.
உக்ரைன் மீதான போரில் கிழக்கு உக்ரைன் மீது ரஷிய படைகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
பல இடங்களில் தீவிரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி தெரிவித்தார். குறிப்பாக, டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் நகர சுற்றுப்புறங்களில் தாக்குதல் தீவிரமாகி உள்ளன. அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் டான்பாஸ் பகுதியில் ரஷியாவின் 6 தாக்குதல் முயற்சிகளை முறியடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது.
லுஹான்ஸ்க் அருகே உக்ரைனின் சு-24 ரக விமானத்தை ரஷியா சுட்டு வீழ்த்தியது. பார்விக்கோவ், இவானிவ்கா ஆகிய இரு இடங்களில் உள்ள வெடிபொருள் கிடங்குகளை ரஷியா ஏவுகணைகள் வீசி அழித்தது. டொனெட்ஸ்க் நகரை கட்டுப்படுத்தும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள், அங்குள்ள சந்தையில் உக்ரைன் நடத்திய குண்டுவீச்சில் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறி உள்ளனர்.
நேட்டோ தரப்பில் குறைந்தது 8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.60 ஆயிரம்கோடி) ராணுவ உதவிகளை வழங்க உறுதி பூண்டுள்ளதாக நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் கூறி உள்ளார்.
அதே நேரத்தில் இந்தப் போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, நாம் நீண்ட காலத்துக்கு தயாராக வேண்டும். இந்தப் போர் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம் என தெரிவித்தார்.
உக்ரைனுக்கு எதிராக கருங்கடல் பகுதியில் நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்பட 20 ரஷிய போர்க்கப்பல்கள் செயல்பட்டு வருவதாக உளவு தகவல் வெளியாகி உள்ளது.
மரியுபோல் நகரில் ரஷிய படைகளின் தீவிர தாக்குதல்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.
மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து விட்டு ஐ.நா. சபை பொதுச்யெலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைன் சென்றார். நேற்று அவர் புச்சா நகரில் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை நடத்துவதை தான் ஆதரிப்பதாகவும், ரஷியா இதற்கு ஒத்துழைக்கவும் அவர் வலியுறுத்தினார்.
போரோடியங்கா நகரில் ரஷிய படைகளின் தாக்குதலில் சேதம் அடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை பார்த்து கண் கலங்கினார். இடிந்த இந்த கட்டிடங்களை பார்க்கும்போது, அவற்றில் ஒரு வீட்டில் என் குடும்பம் இப்போது அழிந்தும், என் பேத்திகள் பீதியில் ஓடுவதையும் கற்பனை செய்கிறேன் என தெரிவித்தார்.
போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி அவர் கருத்து தெரிவித்தபோது, சந்திப்புகளால் போர் முடிவுக்கு வந்து விடாது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா முடிவு எடுக்கிற வரையில் போர் முடிந்து விடாது என குறிப்பிட்டார்.
உக்ரைன் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில், நோட்டீஸ்கள் அனுப்பியும் ரஷியாவிடம் இருந்து இன்னும் பதில் பெறப்படவில்லை என்று சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் தலைமை வக்கீல் கரீம் கான் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை சேர்ந்த 50 பயிற்சியாளர்களுக்கு அமெரிக்கா போர்ப்பயிற்சி அளித்து முடித்துள்ளதாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை கூறியுள்ளார்.
இங்கிலாந்தும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது ஐரோப்பாவின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாக ரஷிய அதிபர் மாளிகை எச்சரித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் தங்களுடைய பொறுமையை சோதிப்பதாகவும் அது தெரிவித்தது.
உக்ரைன் போரில் இதுவரை 2,829 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,180 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.