வாஷிங்டன்,
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. நேற்றைய நிலவரப்படி இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நோக்கி விரைகிறது. சரியாக சொல்வதென்றால், 49 லட்சத்து 71 ஆயிரத்து 684 ஆக உள்ளது.
இது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையத்தின் தரவு ஆகும். சிகிச்சை பலனின்றி இறந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 24 ஆயிரத்து 155 ஆகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 67 ஆயிரத்து 334 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்து விட்டது.
சரியாக 93 ஆயிரத்து 343 பேர் பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறுகிறது.
நியூயார்க் மாகாணம்தான் 3 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கொண்ட மாகாணமாக திகழ்கிறது. இங்கு மட்டுமே 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளை கொண்ட மாகாணங்களாக நியூஜெர்சி, இல்லினாய்ஸ், மசாசூசெட்ஸ், கலிபோர்னியா, பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகியவை உள்ளன.
கொரோனா வைரஸ் ஆதிக்கத்துக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட மாகாகணங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட்டன.
ரஷிய நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. தினமும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேருக்கு அங்கு புதிதாக இந்த தொற்று பாதித்து வருவது மக்களை அலற வைப்பதாக அமைந்துள்ளது.
அங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. நேற்று நிலவரப்படி அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 99 ஆயிரத்து 941 ஆக இருந்தது. பலி எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 837 ஆக இருந்தது. 3 ஆயிரத்தை நோக்கி அந்த எண்ணிக்கை விரைகிறது.
2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோயாளிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் (2,65,896), இங்கிலாந்து (2,48,818), ஸ்பெயின் (2,78,803), இத்தாலி (2,26,699) ஆகிய நாடுகள் உள்ளன.
பிரான்ஸ் 1 லட்சத்து 79 ஆயிரத்து 927 பேருடனும், ஜெர்மனி 1 லட்சத்து 77 ஆயிரத்துக்கு அதிகமானோருடனும் உள்ளன.
அதே நேரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற உலக சுகாதார நிறுவனம், நேற்று முன்தின நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் உலகமெங்கும் 16 லட்சத்து 18 ஆயிரத்து 821 பேரை பாதித்துள்ளது. நேற்று முன்தினத்துடன் முடிந்த 24 மணி நேரத்தில் 4,452 பேர் பலியாகி, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 847 என உள்ளதாக இந்த தரவு தெரிவிக்கிறது.