உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை ஆமை வேகத்தில் நடப்பதாக புகார்; துரிதப்படுத்துவதற்கான வரைவு திட்டம் வெளியீடு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனை ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சோதனையை மாகாணங்கள் துரிதப்படுத்துவதற்கான வரைவு திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம், பிற நாடுகளை விட அதிகமாக உள்ளது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது அமெரிக்காவில்தான். அங்குதான் அதிக எண்ணிக்கையில் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. அங்குதான் அதிக எண்ணிக்கையானவர்களுக்கு பரிசோதனைகளும் நடைபெறுவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதல் வேகம் சற்றே குறைந்திருப்பதாகவும், உயிர்ப்பலிகளும் குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அதைத் தொடர்ந்து பல மாகாணங்களும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆனால் இப்போது, அங்கு பரிசோதனைகள் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இவ்வளவுக்கும் அங்கு வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 55 லட்சத்து 93 ஆயிரத்து 500 பேருக்கு இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேருக்கு அல்லது அதற்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே இனிவரும் வாரங்களில் பரிசோதனை நடவடிக்கையை மாகாணங்கள் அதிகரிக்க செய்யும் வகையில், ஒரு வரைவு திட்டத்தை வாஷிங்டன் வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் வெளியிட்டு இருக்கிறது.

அதற்கு முன்பாக ஜனாதிபதி டிரம்பும், மருத்துவ நிபுணர்களும் இந்த வரைவு திட்டம் குறித்து மாகாண கவர்னர்களிடம் விவரித்தனர்.

புதிய பரிசோதனை இலக்குகள், மாகாணங்களில் போதுமான அளவுக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 2.6 சதவீத மக்களுக்கு பரிசோதனை செய்ய வழிவகுக்கும்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ள இடங்களில் இந்த அளவை விட இரு மடங்கு அல்லது அதற்கு அதிகமாகவும் சோதிக்க முடியும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை சொல்கிறது.

நாடு முழுவதும் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சி.வி.எஸ்., வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களை ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேசி உள்ளார்.

அதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் டிரம்ப் பேசுகையில், கொரோனா பரிசோதனை நடத்துவது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று கூறினார். இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் கடந்த காலத்தில் அளித்த பல உறுதிமொழிகளும், பரிசோதனைகளின் குறிக்கோள்களும் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில், எபோலா வைரஸ் பரவியபோது பேரழிவு தயார் நிலை வல்லுனராக திகழ்ந்த ஜெர்மி கோனின்டிக் கருத்து தெரிவித்தார். அவர், டிரம்ப் நிர்வாகத்தில் கொரோனா வைரஸ் சோதனை திட்டங்களைப் பொறுத்தமட்டில் தேவைக்கும் குறைவாக உள்ளது. சந்தேகங்கள் நீடிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தினமும் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதை இலக்காக கொண்டிருக்க வேண்டும். (டிரம்ப், தினமும் 2 லட்சம் பேருக்கு சோதனை நடத்துவதாக கூறுகிறார்.) கடந்த ஒரு மாதத்தில் நாம் சோதனைகள் நடத்துவதை இரட்டிப்பு ஆக்கி இருக்கிறோம். நீங்கள் தாராளமாக 3 மடங்காக்க விரும்பினால், அதை இப்போது 10 மடங்காக பெருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரைவு திட்டத்தில், வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்புவதற்காக வழங்கப்பட்ட விதிமுறைகளில் தவறவிடப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கண்காணிப்பு சோதனைகள் மற்றும் துரித சோதனைகள் வாயிலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், அவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களையெல்லாம் கண்டறியவும் அது வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது