காத்மாண்டு,
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் ஆபத்தான தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
அந்த வகையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேபாளத்தில் உள்ள உலக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்று (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக செயலாளர் நாராயண் பிரசாத் பிதாரி கூறுகையில், ஏப்ரல் 30-ந் தேதி வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என கூறினார்.
மேலும் அவர் இன்று முதல் நேபாளத்துக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு நேபாளம் மற்றும் சீனா வழியாக செல்ல முடியும். கொரோனா வைரஸ் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதியை சீனா ஏற்கனவே ரத்து செய்துள்ள நிலையில், நேபாளமும் இப்போது ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.