சியோல்,
ஆசிய நாடுகளில் தனது சொந்தக்காலில் நின்று அதிக உயிரிழப்பின்றி, கொரோனாவின் தாக்குதலை வெற்றிகரமாக சமாளித்து வரும் நாடு, தென்கொரியா. இதனால் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதற்காக பாராட்டையும் அது பெற்றது.
இந்தநிலையில், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்து குணமடைந்த 292 பேரை மறு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது, தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மருத்துவ நிபுணர்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. உலக நாடுகளும் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தன.
இந்த 292 பேருக்கும் மீண்டும் ஏதோ ஒரு வழியில் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது.
இந்த நிலையில் குணமடைந்தவர்களின் உடலில் கொரோனா வைரசின் இறந்த துகள்கள் காரணமாகவே இவர்களுக்கு மறு பரிசோதனையில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பேராசிரியர் ஓ மியோங்டான் கூறுகையில், கொரோனா வைரஸ் செயல் இழந்த நிலையிலும் கூட ஆர்.என்.ஏ. என அழைக்கப்படும் ரைபோ கரு அமிலம் மனித உடலின் ஏதாவது ஒரு செல்லில் இருந்திருக்கலாம். மறு முறை சோதனை செய்யப்பட்டபோது செயலிழந்த இந்த வைரசின் ஆர்.என்.ஏ. எடுக்கப்பட்டு இருக்கலாம். இதனால்தான், குணமடைந்தவர்களை சிலநாட்களுக்கு பிறகு மறு பரிசோதனை செய்தபோது அவர்களிடம் தொற்றின் அறிகுறி தென்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
இதுவரை குணமடைந்த கொரோனா நோயாளிகளை 28 நாட்கள் தனிமைப்படுத்தி அனுப்பிய 13.5 நாட்கள் கழித்தே இந்த மறு பரிசோதனை தென் கொரியாவில் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆய்வு முடிவுகளில் குழப்பம் உருவாகி இருப்பதால், சிகிச்சைக்கு பின்பு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் தற்போது 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மறு பரிசோதனையின்போது ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கான அடையாளத்தை காண்பது தொடர்பாக விரிவான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அதேநேரம், கொரோனா தாக்கி குணமடைந்தவர்களை மறு பரிசோதனை செய்வது 2 சதவீதம் வரை தென்கொரியாவில் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதை உறுதி செய்யும் விதமாக மறுபரிசோதனை செய்வதும் 2.7 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மறு பரிசோதனை செய்யப்பட்ட 292 பேரில் தொடக்க நிலை ஆய்வுக்கு 137 பேரின் மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவர்களில் 61 பேருக்கு லேசான அளவில் கொரோனா அறிகுறி இருந்துள்ளது. 72 பேர் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர். எஞ்சிய 4 பேர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.