உலக செய்திகள்

பிஜி தீவுகளின் தெற்கு பகுதிகளை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி கீதா

பிஜி தீவுகளின் தெற்கு பகுதிகளை சக்தி வாய்ந்த சூறாவளியான கீதா தாக்கியுள்ளது.

வெல்லிங்டன்,

பிஜி தீவுகளின் வடோவா மற்றும் ஓனோ ஐ லாவ் உள்ளிட்ட சில பகுதிகளில் கீதா என்ற சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. இதுபற்றி பிஜி வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், மணிக்கு சராசரியாக 195 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும். இது மணிக்கு 275 கி.மீட்டர் வரை வேகமுடன் வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தெற்கு பகுதிகளில் கிராமப்புறங்களுடனான தொடர்பு பாதிக்கப்பட்டு உள்ளது. ஓனோ கிராமவாசிகள் தெரிவித்த தகவலின்படி, பயிர்கள் மற்றும் பல்வேறு வீடுகள் சூறாவளியால் சேதமடைந்துள்ளன. ஆனால் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த வாரத்தில் சமோவா மற்றும் அமெரிக்க சமோவா பகுதிகளில் கீதா சூறாவளி பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவில் டோங்கா பகுதியை தாக்கிய சூறாவளியால் பரவலான பாதிப்பு மற்றும் வெள்ளமும் ஏற்பட்டது. சூறாவளி மேற்கு நோக்கி சென்று பின் தெற்கு பகுதிக்கு திரும்பும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கின்றது.