கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான பனிப்புயலை எதிர்கொண்டு வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் பயங்கர பனிப்புயல் கடந்த இரு தினங்களாக அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.

இந்த புயல் தற்போது கனடாவின் கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டிருந்தாலும் கூட, கடுமையான காற்று, கடுமையான பனியுடன் அமெரிக்க மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பனிப்புயல் அங்கு ஆண்டின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது. கடும் குளிரால் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கியுள்ளனர். அதோடு, பனிப்புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் மக்கள் கிறிஸ்துமஸ் இரவில் மின்சாரம் இன்றி பரிதவிப்புக்கு ஆளாகினர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டது.

இதனிடையே சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அந்த வகையில் ஓஹியோ மாகாணத்தில் நிகழ்ந்த சங்கிலி தொடர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உள்பட 12 பேர் பனிப்புயலால் பலியனாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் மேலும் பலர் உயிரிழந்ததாகவும், இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓக்லஹோமா, கென்டக்கி, மிசோரி, டென்னசி, விஸ்கான்சின், கன்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, நியூயார்க், கொலராடோ மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு