குயிட்டோ,
தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குயாகுவில் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. லாஸ் வெகோஸ்' மற்றும் லாஸ் கேனரஸ்' என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
மேலும் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தினர். கலவரம் சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றதால் கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 5 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கலவரம் முழுவதும் கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இந்த கலவரத்தில் முதற்கட்டமாக 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ஈகுவடார் சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். மேலும் 52-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.